அசுர குணங்களை அழிக்கும் தேவி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர், அன்னை சக்தியின் கோயிலுக்கும் புகழ் பெற்றது. இங்கே தேவி திரிபுரமாலினி என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறாள்.


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர், அன்னை சக்தியின் கோயிலுக்கும் புகழ் பெற்றது. இங்கே தேவி திரிபுரமாலினி என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறாள். சக்தி பீடங்கள் 51ல் இருபதாவது பீடமாகத் திகழும் இந்தத் தலத்தில் தேவியின் தனங்களுள் ஒன்று விழுந்ததாகக் கருதப்படுகிறது.
தேவர்களின் தலைவனாகிய இந்திரன் ஒரு நாள் கயிலை மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சிவபெருமான் விருத்தராக வடிவம் தாங்கி இந்திரன் வரும் வழியில் நின்று கொண்டிருந்தார். தான் வரும் வழியில் அலட்சியமான தோரணையில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்ட இந்திரன் கடுங் கோபம் கொண்டான். வச்சிராயுதத்தை எடுத்து அவர் மீது ஓங்கி அடித்தான். அடித்த வேகத்தில் வச்சிராயுதம் பொடிப் பொடியாகி விழுந்தது. தன் முன் நின்று கொண்டிருப்பவர் சாதாரணமானவர் அல்லர் என்பதை உணர்ந்த இந்திரன், வந்திருப்பவர் சிவபெருமானே என்பதை உணர்ந்தான். பெருமானே நான் அறியாமல் செய்த பிழையினை பொறுத்தருள வேண்டும் என்று கூறி திருப்பாதங்களைப் பணிந்தான்.
சிவபெருமான் தேவேந்திரனை மன்னித்து அருளினார். இருப்பினும் வச்சிராயுதத்தைக் கொண்டு தாக்கிய போது சினமானது வியர்வைத் துளிகளாக அவர் மேனியிலே அரும்பியிருந்தது. அந்த வியர்வைத் துளிகள் கடலில் விழுந்து ஒரு புத்திரனாக உருவானது. கடலரசன் அவனைத் தன் மகனாகவே கருதி வளர்த்து வந்தான். ஜலத்திலிருந்து தோன்றியதால் ஜலந்தரன் என்று பெயர் பெற்றான் அவன். ஜலந்தரன் அளப்பரிய சக்தியைப் பெற்றவனாக இருந்தான். சக்தி பெற்ற காரணத்தால் மெலியோரை வருத்தும் செயலில் இறங்கினான். தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். மேலும், ஈசனையும் வெல்வேன் என்று மார் தட்டினான்.
அவன் கயிலையை நோக்கி வருவதைக் கண்ட முனிவர்கள், கொடியவனால் என்ன நேருமோ என்று அஞ்சினர். ஈசன் வேதியன் போல் உரு எடுத்து, ஜலந்தரனிடம் "என்னை வென்றுவிட்டு, பிறகே கயிலை செல்ல முடியும்' என்றார்.
ஜலந்தரன் முதலில் கர்ஜித்தான். பின்பு அந்த சவாலை ஏற்றுக் கொண்டான். உடனே அந்த வேதியர் தன் கால் பெருவிரலால் சக்கரத்தை வரைந்தார். இந்தச் சக்கரத்தை முதலில் தூக்க வேண்டும் என்றார். அவனுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அந்தச் சக்கரத்தினைத் தூக்கிய போது அது அவனை இரு துண்டாக்கி அழித்தது.
அசுரனின் ஆணவத்தை அகற்றிய அந்தப் புண்ணியத் தலத்தில்தான் அன்னையின் உடற்கூறு விழுந்து சக்தி பீடமாக விளங்கி வருகிறது.
ஜலந்தரில் வீற்றிருக்கும் சக்தி பீட நாயகி திரிபுரமாலினி மூவுலகங்களிலும் ஆட்சி செலுத்துபவளாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள். அன்னை நம்மிடையே உள்ள அசுர குணங்களான ஆணவம், சூது, வஞ்சகம் போன்ற அனைத்து குணங்களையும் அழிக்கும் சக்தியாக விளங்குகிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...